மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?”

மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?”

மட்டக்களப்பு நகரின் வடமேற்குப் பிரதேசத்தில் ஒன்றரை மணிநேர பயணத் தொலைவில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புறமான மயிலந்தனை கிராமத்துக்குள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினர் திடீரெனப் பிரவேசித்த பொழுது நல்லராசா நல்லம்மா தனது வீட்டில் பகலுணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்து பெண்கள் மற்றும் பிள்ளைகளை வேறாகவும், ஆண்களை வேறாகவும் பிரித்தெடுத்தார்கள். அதன் பின்னர் நல்லம்மா செவிமடுத்த சொற்கள் அவரை அச்சத்தில் உறைய வைத்தன. “பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?” என ஒரு இராணுவ சிப்பாய் கேட்டார். மற்றொருவர் அதற்கு இப்படி பதிலளித்தார்: “ஆம், எல்லோரையும் கொலை செய்யுங்கள்.”

மயிலந்தனை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக இருந்து வருவதுடன், அங்குள்ள விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் வசதி வாய்ப்புகள் குறைந்த வறுமை நிலையில் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். குழாய் நீர் வசதி இல்லாத, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும் இடிந்து விழக்கூடிய நிலையிலிருந்து வரும் வீடுகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள். அருகிலிருக்கும் கடை முப்பது நிமிட தூரத்திலிருப்பதுடன், ஒரு எளிமையான வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் மட்டுமே அங்கு கிடைக்கின்றன.

1992 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் அக்கிராமத்தில் தொண்ணூறு குடும்பங்கள் வசித்து வந்தன. ஆனால், படுகொலைகளையடுத்து முப்பது குடும்பங்கள் மட்டுமே அங்கு எஞ்சின. தம்மைத் தாக்கியவர்களை அடையாளம் காட்டியதன் காரணமாகவும், அவர்கள் மீது வழக்குத் தொடுக்கச் செய்ததன் காரணமாகவும் மேலும் பழிவாங்கல் செயல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் ஏனையவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றார்கள். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் கடும் அதிர்ச்சியிலிருந்து வருவதுடன், உரிய விதத்தில் குணப்படுத்தப்படாத ஆழமான கத்திக் குத்துக் காயங்களை இன்னமும் கொண்டுள்ளனர்.

ஒரு சிலர் அந்தத் திகிலூட்டும் காட்சிகளை மீண்டும் நினைவூட்ட விரும்பவில்லை. அச்சம்பவம் இடம்பெற்று முப்பத்தொரு வருடங்களின் பின்னரும் கூட, அவர்களிடம் இன்னமும் பழிவாங்கல் தொடர்பான அச்சம் நிலவி வருகின்றது. ஆனால், நல்லம்மா (58) தன்னுடைய மூன்று வயதுப் பிள்ளையுடன் உயிர் தப்புவதற்காக ஓடிச் சென்ற பொழுது, எவ்வாறு தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்பதனை எடுத்து விளக்கினார். “நான் கீழே விழுந்தேன். என்னுடைய பிள்ளைக்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டுக்கு அவர்கள் தீ வைத்த பொழுது அதனை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனையடுத்து  மூர்ச்சையாகினேன். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இரண்டு நாட்களின் பின்னரேயே எனக்கு சுயநினைவு திரும்பியது” என்கிறார் அவர்.

தான் தப்பியோடியதற்கு முன்னர், தனது கண்களுக்கெதிரிலேயே கர்ப்பிணிப் பெண்மணியொருவர் கொடூரமாக கொலை செய்யப்படுவதைப் பார்த்ததை நல்லம்மா நினைவுபடுத்துகிறார்.

அங்கு பத்துப் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டதாகக் கூறும் கருப்பையா பெரியண்ணன் (69) தனது மகன் தப்பியோடி, ஒரு வயல்வெளியில் ஒளிந்து கொண்டிருந்த காரணத்தினால் உயிர் தப்பியதாகச் சொல்கிறார். “மரணித்தவர்கள் தொடர்பாக நினைவேந்தல் எவையும் இடம்பெறுவதில்லை. ஏனென்றால், அவர்களுடைய வீடுகள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அந்த வீடுகள் அனைத்தையும் இராணுவத்தினரே கொளுத்தினார்கள்” என்றார் அவர். இத்தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டதுடன், 40 பேர் காயமடைந்தார்கள்.

மயிலந்தனையில் ஆகஸ்ட் 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு முந்தைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறையில் ஒரு ஜீப் வண்டியின் கீழ் குண்டு வெடித்து, அதன் விளைவாக இராணுவ அதிகாரியாக இருந்து வந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவயையும் உள்ளிட்ட பல உயர் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். அந்தக் கொலைகளுக்குப் பழிவாங்கும் விதத்திலேயே மயிலந்தனை தாக்குதல் இடம்பெற்றதாக  நம்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அந்தத் தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்றிருந்தது.

உயிர் தப்பியவர்களில் ஒரு சிலரால் தம்மீது தாக்குதல் தொடுத்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. மரக்கறி வகைள், கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற பொருட்களை வாங்குவதற்காக வழமையாக தமது கிராமத்துக்கு வரும் ஆட்களாக அவர்கள் இருந்தனர். சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, இருபத்து நான்கு இராணுவ வீரர்களை அடையாளம் காட்டியிருந்தனர். கொலை, கொலை முயற்சி மற்றும் சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல் என்பவற்றையும் உள்ளடக்கிய 85 குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான பூர்வாங்க விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன் விளைவாக, சாட்சியமளிப்பவர்கள் தமக்குப் பரிச்சயமில்லாத ஒரு இடத்திற்கு நீண்டதூரம் பயணித்து செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டார்கள். அதன் பின்னர், அந்த விசாரணை அதிலும் பார்க்க தொலைத்தூர இடமான கொழும்புக்கு மாற்றப்பட்டது. அதன் காரணமாக, சாட்சியமளிப்பவர்கள் அங்கு செல்வது மேலும் சாத்தியமற்றதாக இருந்து வந்தது. நீதித்துறை ஆள்புல எல்லையின் பிரகாரம், இந்த விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தும் விதத்தில் அவர்கள் சாட்சியமளிக்க முன்வந்தால்  அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இராணுவத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட செய்திகளையும் உள்ளடக்கிய விதத்தில் அச்சுறுத்தல்கள் மற்றும் பயமுறுத்தல்கள் என்பவற்றுக்கு மத்தியிலும் கூட, சாட்சிகள் மிகவும் உறுதியாக நின்றார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஆஜரானார். “சாட்சிகள்  உணர்ச்சிவசப்படாத நிலையில் விசாரிக்கப்படும் ட்ரையல்  அட் பார் விசாரணைக்குப் பதிலாக, இந்த வழக்கு சிங்கள மொழி பேசும் நடுவர் மன்றத்தின் முன்னால் நடத்தப்பட்டது. இங்கு முன்வைக்கப்பட்ட சாட்சிகள் சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களுடைய சாட்சிகளாக இருந்து வந்தமையால் அவை மிகவும் வலுவானவையாக இருந்து வந்தன. குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்குமாறு நீதிபதி நடுவர் மன்றத்துக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதிலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்” என்கிறார் திரு. ரத்னவேல்.

இந்தக் கிராமத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத நிலையில் வடக்கில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவத்துக்குப் பழிவாங்கும் பொருட்டு எந்தக் காரணமும் இல்லாமல் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விடயத்தை அவர் சுட்டிக் காட்டினார். கொலையுண்டவர்கள் அனைவரும் சிவிலியன்களாக இருந்து வந்ததுடன், வறியவர்களாகவும், விளிம்பு நிலை மக்களாகவும் இருந்தார்கள். “இராணுவ வீரர்கள் தொடர்ந்தும் தண்டனை விலக்குரிமையை அனுபவித்து வரும் நிலையை அது காட்டுகின்றது. அவர்கள் அந்தக் குற்றச் செயல்களை இழைத்திருந்த போதிலும், சட்டச் செயன்முறையில் நிலவிவரும் குறைபாடு காரணமாக, தமது குற்றச் செயல்களுக்கான  பின்விளைவுகளை எதிர்கொள்ளவில்லை” என்கிறார் அவர். “சிவிலியன்கள் மீது மிகக் கொடூரமான குற்றச் செயல்களை இழைத்த நபர்கள் கடந்த பல தசாப்தகாலமாக சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. இது பாதுகாப்புத் துறையினர் மேலும் அதிகளவிலான குற்றங்களை நிகழ்த்துவதற்கு அவர்களை ஊக்குவித்துள்ளது. ஏனெனில், அக்குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இது அவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சுழல் இப்பொழுது தொடர்ந்து இடம்பெறுகிறது.”

கல்வியறிவு பெற்றவர்களாகவோ அல்லது நவீன பாணி வாழ்க்கை மாதிரிகளை  கொண்டவர்களாகவோ இருந்து வராத போதிலும், சாட்சிகள் அச்சமின்றி சாட்சியமளித்தார்கள் என்றும், பயமுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் என்பவற்றுக்கு மத்தியில் அவர்கள் உண்மையின்பால் நின்றிருந்தமையே அதற்குக் காரணம் என்றும்” கூறுகிறார் சட்டத்தரணி ரத்னவேல்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிசார் நட்ட ஈடு வழங்குவது ஒருபுறமிருக்க, அவர்களுக்கெதிராக ஒரு குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற விடயத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாமல், ஒரு தொகுதி மக்களை இவ்விதம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்ட மக்களாக விட்டு வைப்பது எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் ஒரு வெட்கக்கேடான செயலாக இருந்து வருகின்றது. அது எமது சமூகத்தின் மீதான ஒரு களங்கமாகவும் உள்ளது. எவரும் இது தொடர்பாக குரலெழுப்பியிருக்கவில்லை. இந்தச்  செயன்முறை தொடர்பாக குறிப்பாக, தென்னிலங்கையிலிருந்து எந்தக் கண்டனக் குரல்களும் எழவில்லை. அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு இப்பொழுதும் கூட காலம் கடந்திருக்கவில்லை. நீண்டகாலம் கடந்திருந்தாலும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களும், இழப்பீடுகளும் வழங்கும் கடமையை சமூகம் கொண்டுள்ளது” என முடிவாகக் கூறினார் சட்டத்தரணி ரத்னவேல்.

Share This